நல்ல பதிலைத் தருபவன் மகிழ்ச்சி அடைகிறான். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் சொல்வது மிகவும் நல்லது. நீதி மொழி 15:23

தகுதியான வார்த்தைகள் பயனளிக்கும்

வெற்றியும், மகிழ்ச்சியும் வாழ்வில் நாம் பிரயோகிக்கின்ற வார்த்தைகளைச் சார்ந்து இருக்கின்றன. வாழ்வின் ஓட்டத்தின் பாதையை கூட ஒரு வார்த்தை தீர்மானித்துவிட முடியம். என்றால், வார்த்தை எத்துணை மதிப்புக்குரியது என்று எண்ணிப்பாருங்கள். மெய்யாகவே அதன் மதிப்பை, விலையை உணர்ந்தால் அதை பொருளுணர்ந்தும், அவசியமானவற்றுக்கும் மட்டுமே பயன்படுத்துவோம். சாலொமோன் அதை ஒரு கொடையாக எண்ணியதால், தேவனிடமிருந்து அதை பரிசாகப் பெற்றான். ஆகவே சொல்கிறான்; நல்ல பதிலைத் தருபவன் மகிழ்ச்சி அடைகிறான். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் சொல்வது மிகவும் நல்லது. நீதி மொழி 15:23 செய்தி பரிமாற்றம், வார்த்தைப் பகிர்வு எல்லாம் பொழுது போக்காக மாறிவிட்ட காலச்சூழலில் அவசியமான நேரத்தில் அளவுடன் வார்த்தைகளைப் பேசும் கலையைப் பேணுவோம். நம் தேவன் வார்த்தைகளை வாழ்வளிக்கத் தகுந்த நிலையில் அனுப்புபவர்; மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை. எசாயா 55:10-11 நாமும் கூட இந்த தேவனுடைய பிள்ளைகள் என்கிற நிலையில் பேசும் வரத்தைப் பெருமையாக எண்ணிப் பயனுள்ள வார்த்தைகளால் எல்லோரது வாழ்வையும் வளமையாக்குவோம்.