கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. நீதிமொழிகள் 9:10

ஊற்றின் அருகில் செல்வோம்

அறிவுக்கும், ஞானத்திற்கும் மிகப்பெரும் வேறுபாடு உண்டு. மனித இனம் முழுவதுமே காலங்காலமாக அறிவை வளர்ப்பதிலே முயற்சியை செலவிடுகிறது. கல்வி நிறுவனங்கள் எல்லாமே மாணவர்கள் அறிவின் உச்சத்தைத் தொட வழிகளை வகுத்துத் தருகின்றன. ஆனால் ஞானத்தின் எல்லையோ மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதாக விளங்குகிறது. தாகத்தோடும், பணிவோடும் எவனொருவன் அதன் ஊற்றை நாடிச்செல்கிறானோ அவனுக்கு அது தாராளமாய் வழங்கப்படுகிறது. அரசனாக நியமனம் பெற்ற தாவீது தன் அறிவினால் தனக்கு போதிய ஞானம் இல்லை என்பதைக் கண்டுகொண்டதால் தாழ்ச்சியோடு தேவனிடம் ஞானம் வேண்டி மன்றாடினான்: “சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக,  நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை.” (1 அரசர்கள் 3: 9-12) ஞானியான அவன் நமக்கும் ஞானத்தைப் பெற வழியைச் சொல்லித்தருகிறான்: “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.” (நீதிமொழிகள் 9:10) ஞானத்தின் ஊற்றாம் தேவனை ஆர்வமாய் நாடுவோம், வாழ்வைப் புரிந்து கொண்டு வழி நடப்போம்.