தேவனின் பிள்ளையாக மாறிய மனிதன் பாவம் செய்வதைத் தொடர்வதில்லை என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன், தேவனின் பிள்ளையைப் பாதுகாக்கிறார். 1 யோவான் 5:18

தவறாமல் சீடத்துவம் பழகுவோம்

எந்த ஒரு துறையிலும், அல்லது கலையிலும் சிறந்து உயர வேண்டுமென்றால் தவறாத பயிற்சியும், விடா முயற்சியும் தேவை. எந்தப் பொழுதில் அதில் நம்மை பதிவு செய்கிறோமோ, அல்லது இணைத்துக்கொள்கிறோமோ அப்பொழுதே அப்பயிற்சியில் உதவியும் கிடைக்கின்றது, விளையாட்டு, இசை, நடனம் போன்றவற்றில் நடப்பது போல. சீடத்துவம் என்பதும் நாம் பயில வேண்டிய கலையே. தேவ மகனின் வார்த்தைகளும், பரிசுத்த ஆவியாரின் உடனிருப்பும் நம்மை நேர்த்தியாய் உருவாக்கி நம் அழைப்பில் வெற்றி காணச்செய்யும். தேவன் தனது பங்கை நிறைவேற்றத் தவறுவதில்லை, நாம் தான் ஆர்வமாய்ப் பயில வேண்டும்; தேவனின் பிள்ளையாக மாறிய மனிதன் பாவம் செய்வதைத் தொடர்வதில்லை என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன், தேவனின் பிள்ளையைப் பாதுகாக்கிறார். தீயவனால் அம்மனிதனைத் துன்புறுத்த இயலாது. 1 யோவான் 5:18 தவறாத பயிற்சி நம்மைத் தோற்கடிக்க எண்ணும் எதிரியிடமிருந்து நம்மை காத்து பலப்படுத்தும். பேதுரு எச்சரிக்கிறான்; உங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு கவனமாக வாழுங்கள்! அலகை  உங்கள் பகைவன். உண்ணும்பொருட்டு எந்த மனிதனாவது அகப்படுவானா என்று தேடிக்கொண்டே கர்ச்சிக்கிற சிங்கத்தைப் போலவே அவன் அலைகிறான். அலகையைப் பின்பற்ற மறுத்துவிடுங்கள். 1 பேதுரு 5:8 நம் முன் எழும் சூழ்ச்சிகளை, மற்றும் சோம்பலை நீக்கி மிகுந்த உற்சாகத்தோடு சீடத்துவம் பயில்வோம்.

 

அப்பா, எங்களை எச்சரித்து, விழிப்பூட்டி உம் நியமங்களைப் பயில அறிவுறுத்துவற்காக நன்றி சொல்கிறோம். உம பரிசுத்த ஆவியார் தாமே இந்தப்  பயிற்சியில் உடனிருந்து, ஊக்கப்படுத்தி வெற்றியின் இலக்கை அடையச்செய்வாராக,இயேசுவின் மிக வல்லமையுள்ள நாமத்தில் செபிக்கிறோம் . ஆமென்.