ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். கொலோசெயர் 3:13

மனதார நாமும் மன்னிப்போம்

பிறருக்கு எதிராக நாம் செய்யும் ஒவ்வொரு தவறும், பிறரைக் காயப்படுத்துவது போல, நம்மையும், நம் ஆன்மாவையும் பலகீனப்படுத்தித் தேவனோடு உள்ள நம் உறவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மற்ற மனிதர்களின் தவறுகின்ற இயல்பை, நம் தவறுகளினின்று உணரும்போது தான், பிறர் மீது கனிவும் கருணையும் தோன்றுகிறது. விசுவாசி என்ற நிலையில், எவருமே பிறருக்கு மன்னிப்பை மறுக்க இயலாது, ஏனென்றால், நாம் எண்ண இயலாத அளவுக்கு மன்னிப்பைப் பெற்று அனுபவிப்பவர்கள். தான் பெறும் மன்னிப்பை உணர்ந்து அனுபவிக்கிற ஒருவனால் மட்டுமே, அதை மற்றவருக்கும் வழங்கி, பிறரைக் குற்றப்பழி உணர்வினின்று விடுவித்துக் குணப்படுத்த முடியும். மனித இனத்தின் எல்லா பாவங்களினின்றும் மன்னிப்பைப் பெற்றுத்தர வந்த கிறிஸ்துவைப் பற்றிய புரிதலின்றி பெரும் தவறுகளைச் செய்த பவுல், அவரைச் சந்தித்தபோது உடலிலும், ஆன்மாவிலும் மன்னிப்பால் குணம் பெற்றான். ஆகவே அறிவுத்துகிறான்; “ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்." கொலோசெயர் 3:13 தேவனின் அளவற்ற இரக்கத்தைத் தினமும் பெறுகின்ற  நாம், மன்னிப்பின் கலாச்சாரத்தை நம் மன்னிப்பின் செயல்களால் பறைசாற்றி சமாதானம் செய்வோம்.

 

அப்பா, நிபந்தனையின்றி நாளும் எங்களை மன்னிப்பதற்காக நன்றி சொல்கின்றோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே விரைவாக மன்னிக்கும் மனப்பக்குவத்தில் எங்களைப் பயிற்றுவிப்பாராக, இயேசுவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.