கர்த்தாவே, எனது கண்களைத் திறவும். நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும், நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும். சங்கீதம் 119:18

அற்புதமான காரியங்களைக் காண்போம்

கண்கள் இருப்பதாலே நாம் நம்மைச் சூழ்ந்திருக்கும் விவரிக்க இயலாத அற்புதமானவற்றைக் காண்போம் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. தேவ இரக்கம் மட்டுமே, நம்மை அவரது சட்டங்களில் புதைந்திருக்கிற ஆழமான இரகசியங்களைக் காணச்செய்யும். ஆகவே தான் தாவீது பெருமூச்செறிந்து செபிக்கிறான்: “கர்த்தாவே, எனது கண்களைத் திறவும். நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும், நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும்.” (சங்கீதம் 119:18) இந்த பூமியில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் காலத்தின் குறைவை, உணர்ந்தால் மட்டுமே, நமக்கென தரப்பட்டுள்ள வாழ்வுக்கான நூலின் இரகசியங்களை நாடி, அறிந்து கொள்ளும் ஆவல்  நமக்குள் எழும். இந்த உள்ளுணர்வால் உந்தப்பட்டே அவன் தொடர்ந்து மன்றாடினான்: “நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன். கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும்.” (சங்கீதம் 119:19) கடந்து செல்லும் காலத்தின் விரைவைக் கணக்கில் கொண்டு, நாமும் தேவனை நாடுவோம். நலம் தரும் அவரின் அற்புதமான காரியங்களைப் பற்றிய அறிவு நம்மை வியப்பிலாழ்த்தட்டும், வழி நடத்தட்டும்.

 

அப்பா, உம் நியமங்களைக் காண, எங்களுக்குத் தந்திருக்கும் இந்த வேட்கைக்காக நன்றி கூறுகின்றோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே காணக்கிடைக்காத அற்புதமான உம்  அரிய செயல்களைப்  பார்க்க உதவி செய்வாராக, இயேசுவின் அற்புதமான நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.