எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள். தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். 1 தெசலோனிக்கேயர் 5:16-18

நேரத்தை முழுதாகப் பயன்படுத்து

தங்களுக்கு நேரமே இல்லையென்று ஒரு சிலர் புலம்புகையில், மற்றும் சிலரோ பெறுவதற்கரிய காலத்தை வீணே செலவு செய்கின்றனர். நம்மால் விலை கொடுத்தாலும் வாங்க இயலாத காலத்தை விரயமாக்குவதும் பாவமே என்பேன். நமக்கு நெருக்கமான குடும்பம், நட்பு இன்னும் வேறு பலவற்றுக்கும் காலத்தை உணர்ந்து செலவு செய்தல் வேண்டும்.தேவன் தந்துள்ள இந்த நல்ல வாழ்வில், நாம் முன்னேறிச் செல்வதை ஒருபோதும் விரும்பாத அலகை, நம்மிடமிருந்து அதிகம் திருடுவதே பொன்னான நம் நேரத்தைத்தான். இறைப் பணியில் விரைந்து முன்னேறிய பவுல், தன் யுத்தியைச் சொல்லித் தருகிறான்; “எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.  பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள்.  தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார்.” 1 தெசலோனிக்கேயர் 5:16-18 நம் காலமும் வாழ்வும், நாம் எண்ணுவதைவிட மிகவும் உயர்ந்தது, எனவே அதை பயனுள்ள வகையில் செலவிட தாவீதும் ஆலோசனை தருகிறான்; “தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும், தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான். ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான். அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான்.” சங்கீதம் 1:1-2 தேவனின் தினசரிக் கொடையாம் காலத்தைப் பொருளுணர்ந்துச் செலவிடுவோம், வாழ்வில் வென்று காட்டுவோம்.

 

அப்பா, தாராளமாய் நீர் வழங்கும் நேரம் என்ற கொடைக்காக நன்றி கூறுகின்றோம்.

உம் பரிசுத்த ஆவியார் தாமே அதைப் பயன்படுத்தக் கற்றுத்தந்து, வழி நடத்துவாராக, இயேசுவின் வல்லமை நிறைந்த நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.