ஆகவே நீ அவர்களை நோக்கி இவ்வாறு சொல்: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: 'என்னிடம் திரும்பி வாருங்கள்,' என்கிறார் படைகளின் ஆண்டவர். செக்கரியா 1:3

திரும்பி வர உத்தரவு

தேசத்தின் தலைவன், இராணுவத்தின் மேல் அதிகாரம் உள்ளவன் என்பதால், முடிவு செய்து தான் விரும்பும் இடத்துக்கு ஆயுதங்களோடே படையை அனுப்புகிறான். அவனே, திரும்பவும் முடிவு செய்து, நாடு திரும்ப உத்தரவிடுகிற போது, வீரர்கள் உடனே எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு திரும்ப வேண்டும். ஆவிக்குரிய வாழ்விலும், நம்மை உருவாக்கி, தகுதியான இடத்தில் நிலை நிறுத்தியுள்ள, படைகளின் ஆண்டவர் உத்தரவு பிறப்பிக்கின்ற போது, அவரிடம் பாதுகாப்பாய் திரும்ப வேண்டும். உலகின் பொருட்களும், அதன் மேலுள்ள அதீத ஆர்வமும், இந்த உத்தரவின் மேன்மையை உணர முடியாத படி, நம் கவனத்தைச் சிதறச் செய்யும்: “காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை.” (எசாயா 1:3) ஆகவே, தன் தீர்க்கதரிசி வழியாக அறிவிக்கிறார்: “ஆகவே நீ அவர்களை நோக்கி இவ்வாறு சொல்: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: 'என்னிடம் திரும்பி வாருங்கள்,' என்கிறார் படைகளின் ஆண்டவர்.” (செக்கரியா 1:3) இந்தச் செய்தியின் ஊடே, தரப்பட்டுள்ள ஆச்சரியமான செய்தி, படைகளின் ஆண்டவர், தானும் திரும்பி வர முடிவு செய்துள்ளதைக் குறிப்பிடுகிறது. என்றால், விரைந்து நாம் அவரை எதிர்கொள்ள, ஆயத்தமாக வேண்டும். வழியில் அவர் மட்டுமே அறிந்த, அந்த இடத்தில், அந்த கணத்தில், நிச்சயமாய் அவர் நம்மைச் சந்திப்பார். ஆர்வமாய், ஆவலுடன் எதிர்கொள்வோம்.

 

அப்பா, உம்மிடம் திரும்ப வர எங்களுக்கு எச்சரித்து, அறிவுறுத்துவதற்கு நன்றி. உம் ஆவியார் தாமே, உம்மைக் காணும் ஆவலை அதிகரித்து, சந்திப்பின் வாக்குறுதியை  விசுவாசித்து வாழச் செய்வாராக. இயேசுவின் வல்லமை நிறை நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.