உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவார். அந்தத் தீர்க்கதரிசியை உங்கள் சொந்த ஜனங்களிடமிருந்தே வரச் செய்வார். உபாகமம் 18:15

தீர்க்கதரிசியின் குரலுக்குச் செவிமடுப்போம்

தூதுவர் என்பவர் தேசத்தின் அதிபரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசத்துக்கு வெளியே, தேசத்தின் சார்பில், தேசத்துக்காகக் குரல்கொடுக்க தேசத்தினால் நியமிக்கப்படுகிறார். கடவுள் தன் மக்களுக்கான செய்தியை, தனது சார்பில் உரக்கக் கூற, தான் விரும்புபவரைத் தேர்ந்தெடுத்து, தான் விரும்பும் இடத்தில் தன் தனிப்பட்ட காரணங்களுக்காக நியமிக்கிறார். நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசி என்றுமே, தன் கருத்தையோ, செய்தியையோ அல்ல, மாறாக, தன்னைத் தேர்ந்தெடுத்து நியமித்தவரின் வார்த்தையையே அறிவிக்கவேண்டும். அவன் கடவுளின் அதிகாரம் பெற்ற பிரதிநிதியாகையால், அவன் வழியாய்க் கடந்துவரும் எச்சரிக்கையின் குரலுக்கு, நாம் கவனமுடன் செவி கொடுக்க வேண்டும்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவார். அந்தத் தீர்க்கதரிசியை உங்கள் சொந்த ஜனங்களிடமிருந்தே வரச் செய்வார். அவர் என்னைப்போன்ற ஒருவராய் இருப்பார். நீங்கள் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும்.” (உபாகமம் 18:15) யார் கடவுளால் நியமிக்கப்பட்டவன் என்பதை உணர்ந்து கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்று, இல்லையென்றால் நமக்கு அவர் தரும் பாதுகாக்கும் ஆலோசனைகள், மற்றும் கட்டளைகளைப் பெறத் தவறலாம். தேவனின் தீர்க்கதரிசி வழி நமக்குக் கடந்து வரும் அதிகாரமானச் செய்தியைப் பெற்று ஆசீர்வாதமாய் கீழ்ப்படிந்து வாழ்வோம்.

 

அப்பா, எங்களுக்குச் செய்தி தரத் தீர்க்கதரிசியை நியமிக்க வாக்களித்ததற்காக நன்றி. உம் ஆவியார் தாமே, தீர்க்கதரிசி வழி, கடந்து வரும் செய்தியை உணர்ந்து பின்பற்ற உதவி செய்வாராக, இயேசுவின் வல்லமை நிறை நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.