விசேஷித்த மகன் பிறக்கும்போது இவைகளெல்லாம் நடைபெறும். தேவன் நமக்கு ஒரு மகனைக் கொடுப்பார். இவரே ஜனங்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்புள்ளவராக இருப்பார். ஏசாயா 9:6

இயேசுவின் ஆட்சி நடக்கும்

தீர்க்கதரிசியின் வாழ்வும், அழைப்பும் மிகவும் விந்தையும், விநோதமானதும் தான். ஏனென்றால், அவன் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளும், பயன்படுத்தும் சொற்றொடரும் விவரிக்க இயலாத அளவு, காலத்தையும் நேரத்தையும் கடந்தது. எனவே, சாதாரண மனிதர்களால் அவர்களையும், அவர்கள் வழி கடந்து வரும் செய்தியையும், உணரவோ அல்லது கிரகிக்கவோ இயலாது. தங்களை பாவத்தினின்றும், கொடியவனின் ஆட்சியினின்றும், விடுவிக்க யார் வருவார் என ஏங்கிய, மக்களுக்கு ஏசாயா தீர்க்கதரிசி வழியாக கடவுள் பேசினார்: “விசேஷித்த மகன் பிறக்கும்போது இவைகளெல்லாம் நடைபெறும். தேவன் நமக்கு ஒரு மகனைக் கொடுப்பார். இவரே ஜனங்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்புள்ளவராக இருப்பார். அவரது நாமமானது ‘ஆலோசகர், வல்லமை மிக்க தேவன், நித்திய பிதா, அதிசயமுள்ளவர், சமாதானத்தின் இளவரசர்” என்று இருக்கும்.’ (ஏசாயா 9:6) நூற்றான்டுகள் கடந்து, இந்த தரிசனம் நிறைவேறும் காலம் வந்த போது, கடவுள் தன் அதிதூதர் கபிரியேலை அனுப்பி தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலை மரியாவிடம் சொல்லி வாழ்த்தினார்: தூதன் அவளிடம், “பயப்படாதே மரியாளே. தேவன், உன்னிடம் பிரியமாயிருக்கிறார். கவனி! நீ கருவுறுவாய். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாய். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராக இருப்பார். மகா உன்னதமான தேவனுடைய குமாரன் என்று மக்கள் அவரை அழைப்பர். அவரது முன்னோராகிய தாவீதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார். சதாகாலமும் யாக்கோபின் மக்கள்மீது இயேசு அரசாளுவார். இயேசுவின் ஆட்சி ஒருபோதும் முடிவுறுவதில்லை” என்றான். (லூக்கா 1:30-33) இறுதிக் காலத்தின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கும் தரப்படும் செய்தியோ, அவர் மகன் இயேசுவின் ஆட்சி வெகு விரைவில் நிறுவப்படும். ஆள்பவர்க்கும், ஆளப்படுவோர்க்கும் இது அதிர்ச்சியைத் தரும் செய்தியே என்றாலும், அவர் ஆட்சி நிகழப்போவது நிச்சயம். நாம் விசுவாசிப்போம், அவர் ஆட்சியில் வேலையற்று, நம்பிக்கையிழந்த நிலையில் திணறிக்கொண்டிருக்கும், ஏழை ஊழியனுக்கு ஒரு சின்ன பணியாவது தந்து காப்பாற்றுவார் என்பதும் செபமும், நம்பிக்கையுமே.

 

அப்பா, நீர் அறிவித்த, நிச்சயமாய் நிகழப்போகிற எல்லா தீர்க்கதரிசனங்களுக்கும் நன்றி. உம் ஆவியார் தாமே, உமது வெளிப்பாடுகளை விசுவாசித்து வாழ, துணிவையும், ஆறுதலையும் தந்து, தேற்றி நடத்துவாராக. இயேசுவின் வல்லமை நிறை நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.