தோபித்து தம் நூற்றுப் பன்னிரண்டாம் வயதில் அமைதியாக இறந்தார்; நினிவேயில் சிறப்புடன் அடக்கம் செய்யப்பட்டார். தோபித்து 14:2-9

தோபித்து 14:2-9

தோபித்து தம் நூற்றுப் பன்னிரண்டாம் வயதில் அமைதியாக இறந்தார்; நினிவேயில் சிறப்புடன் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பார்வை இழந்தபோது அவருக்கு வயது அறுபத்திரண்டு. அவருக்குப் பார்வை திரும்பியபின் வளமாக வாழ்ந்து, தருமங்கள் புரிந்து வந்தார்; கடவுளைப் போற்றுவதிலும் அவரது பெருமையை அறிக்கையிடுவதிலும் ஓயாது ஈடுபட்டிருந்தார். அவர் இறக்கும் தறுவாயில் இருந்தபொழுது தம் மகன் தோபியாவை அழைத்துப் பின்வருவாறு அறிவுறுத்தினார்: மகனே, உன் மக்களை அழைத்துக்கொண்டு, 4 மேதியாவுக்குத் தப்பிச் செல்; ஏனெனில் நினிவேக்கு எதிராக இறைவாக்கினர் நாகூம் வழியாகக் கடவுள் கூறிய வாக்கு நிறைவேறும் என நம்புகிறேன். கடவுள் அனுப்பிய இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் அசீரியாவுக்கும் நினிவேக்கும் எதிராகக் கூறிய அனைத்தும் தவறாது நிகழும். உரிய வேளையில் அவை அனைத்தும் நடந்தே தீரும். பாபிலோன், அசீரியா ஆகியவற்றைவிட மேதியா நாடு பாதுகாப்பாக இருக்கும்; ஏனெனில் கடவுள் கூறிய அனைத்தும் நிறைவேறும் என நான் நம்புகிறேன். அவையெல்லாம் தவறாது நடந்தே தீரும். இஸ்ரயேல் நாட்டில் வாழும் நம் உறவினர் அனைவரும் சிதறடிக்கப்பட்டு, அந்த நல்ல நாட்டிலிருந்து கடத்தப்படுவர். சமாரியாவும் எருசலேமும் உட்பட இஸ்ரயேல் நாடு முழுவதும் பாலைநிலமாகும். கடவுளின் இல்லம் தீக்கிரையாகிச் சிறிதுகாலத்திற்குப் பாழடைந்து கிடக்கும். 5 கடவுள் மீண்டும் அவர்கள்மீது இரக்கங்காட்டுவார். மீண்டும் அவர்களை இஸ்ரயேல் நாட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருவார். மீண்டும் அவர்கள் கடவுளின் இல்லத்தைக் கட்டி எழுப்புவார்கள். ஆனால் குறிப்பிட்ட காலம் நிறைவேறும்வரை அது முதலில் கட்டப்பட்ட இல்லம்போன்று இராது. அதன்பின் இஸ்ரயேலர் அனைவரும் சிதறடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து திரும்பி வருவர்; எருசலேமைச் சிறப்புடன் கட்டி எழுப்புவர். இஸ்ரயேலரின் இறைவாக்கினர்கள் கூறியபடி அந்நகரில் கடவுளின் இல்லம் கட்டப்படும். 6 உலகம் முழுவதிலும் உள்ள மக்களினத்தார் அனைவரும் மனம் மாறுவர். உண்மையாகவே கடவுளுக்கு அஞ்சுவர்: தங்களை ஏமாற்றி, தவறான வழியில் நடக்கத் தூண்டிய சிலைகளையெல்லாம் விட்டொழிப்பர்: என்றுமுள கடவுளை நேர்மையுடன் போற்றுவர். 7 அக்காலத்தில் எஞ்சியிருக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் உண்மையில் கடவுளை நினைப்பர்; ஒன்றுகூடி எருசலேமுக்குத் திரும்பி வந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆபிரகாமின் நாட்டில் எக்காலத்துக்கும் பாதுகாப்பாகக் குடியிருப்பர். உண்மையில் கடவுள்மீது அன்புகூர்வோர் மகிழ்வர்; பாவமும் அநீதியும் புரிவோர் உலகம் எங்கிலுமிருந்தும் மறைவர். 8 இப்பொழுது, என் மக்களே, உங்களுக்கு நான் இடும் கட்டளை: கடவுளுக்கு உண்மையாகப் பணிபுரிங்கள்; அவர் திருமுன் அவருக்கு உகந்ததைச் செய்யுங்கள்; நேர்மையாய் ஒழுகவும் தருமங்கள் செய்யவும் உங்கள் குழந்தைகளுக்குப் பயிற்சி அளியுங்கள். அதனால் அவர்கள் கடவுளை நினைத்து, எக்காலத்திலும் முழு ஆற்றலுடன் உண்மையோடு அவரது பெயரைப் போற்றுவார்கள். 9 இப்பொழுது, மகனே, நினிவேயிலிருந்து புறப்படு: இங்குத் தங்காதே. என் அருகில் உன் தாயை அடக்கம்செய்தபின் இந்நாட்டின் எல்லைக்குள் தங்காதே: ஏனெனில் இங்கு அநீதி மலிந்துள்ளது: வஞ்சகம் நிரம்பியுள்ளது. மக்களோ அதைப்பற்றி வெட்கப்படுவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

 

 

ஆதியாகமம் 12:1-2 

 கர்த்தர் ஆபிராமிடம்,

“நீ உனது

ஜனங்களையும், நாட்டையும்,

    தந்தையின் குடும்பத்தையும்விட்டு வெளியேறி நான் காட்டும் நாட்டுக்குப் போ.

நான் உன் மூலமாக ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன்.

    நான் உன்னை ஆசீர்வதிப்பேன்.

உனது பெயரைப் புகழ்பெறச் செய்வேன்.

    ஜனங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க உன் பெயரைப் பயன்படுத்துவர்.

 

 

மத்தேயு 2:13-14 

13 ஞானிகள் சென்றபின், யோசேப்பின் கனவில் ஒரு தேவதூதன் தோன்றி, “எழுந்திரு! குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பிச்செல். ஏரோது குழந்தையைத் தேடத் தொடங்குவான். ஏரோது குழந்தையைக் கொல்ல விரும்புகிறான். எனவே, நான் சொல்லுகிறவரைக்கும் எகிப்தில் தங்கியிரு” என்று சொன்னான்.

14 எனவே யோசேப்பு விழித்தெழுந்து குழந்தையுடனும் அதன் தாயுடனும் இரவிலே எகிப்துக்குப் புறப்பட்டான்.