ஜனங்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்குப் பிரசங்கிக்க வேண்டாம். எங்களைப் பற்றிய அந்தத் தீயவற்றைச் சொல்லவேண்டாம்.. . மீகா 2:6-11

சமூக நீதி கட்டாயம்

மீகா 2:6-11

பிரசங்கம் செய்ய வேண்டாம் என மீகா கேட்டுக்கொள்ளப்படுகிறான்

ஜனங்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்குப் பிரசங்கிக்க வேண்டாம்.

    எங்களைப் பற்றிய அந்தத் தீயவற்றைச் சொல்லவேண்டாம்.

எங்களுக்குத் தீயவை எதுவும் ஏற்படாது”

ஆனால் யாக்கோபின் ஜனங்களே,

    நான் இவற்றை கட்டாயம் சொல்ல வேண்டும்.

கர்த்தர் அவரது பொறுமையை இழந்துக்கொண்டிருக்கிறார்.

    ஏனென்றால் நீங்கள் தீமை செய்திருக்கிறீர்கள்.

நீங்கள் சரியானபடி வாழ்ந்தால்

    பிறகு நான் உங்களிடம் இனிமையாகப் பேசமுடியும்.

ஆனால் என் ஜனங்களுக்கு, அவர்கள் விரோதியைப்போல் ஆகிறார்கள்.

    நீங்கள் கடந்து செல்லுகிறவர்களின் ஆடைகளைக் களவாடுகிறீர்கள்.

அந்த ஜனங்கள் தாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாக நினைக்கிறீர்கள்.

    ஆனால் நீங்கள் அவர்களிடமிருந்து யுத்தத்தின் கைதிகளிடமிருந்து எடுப்பது போல பொருள்களைப் பறித்துக்கொள்கிறீர்கள்.

நீங்கள் எனது ஜனங்களிலுள்ள பெண்களிடமிருந்து

    அழகான வீடுகளை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் எனது செல்வத்தை

    அவர்களின் சிறிய பிள்ளைகளிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

10 

எழுங்கள், புறப்பட்டுப்போங்கள்.

    இது நீங்கள் ஓய்வெடுக்கும் இடமாக இராது. ஏனென்றால், இந்த இடத்தை நீங்கள் அழித்தீர்கள்.

இதனை நீங்கள் அசுத்தம் செய்தீர்கள். எனவே, இது அழிக்கப்படும்.

    இது பயங்கரமான அழிவாக இருக்கும்.

11 

இந்த ஜனங்கள், நான் சொல்வதைக் கேட்க விரும்புவதில்லை.

    ஆனால் ஒருவன் பொய்களைச் சொல்லிக்கொண்டு வந்தால் பிறகு, அவனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

அவர்கள் ஒரு பொய் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொண்டு, அவன் வந்து,

    “அப்பொழுது வருங்காலம் நல்லகாலமாக தோன்றும், திராட்சைரசமும் மதுபானமும் ஏராளமாக கிடைக்கும்” என்று சொன்னதும் அவனையும் ஏற்றுக்கொள்வார்கள்.

 

சமூக நீதி கட்டாயம்

 

யோனா 3 :1-10

தேவன் அழைக்கிறார், யோனா கீழ்ப்படிகிறான்

3 பிறகு கர்த்தர் யோனாவிடம் மறுபடியும் பேசினார். கர்த்தர், 2 “அந்த பெரிய நினிவே நகரத்திற்குப் போ, நான் உனக்குச் சொன்னவற்றைப் பிரசங்கம் செய்” என்றார்.

3 எனவே யோனா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான், அவன் நினிவே நகரத்திற்குப் போனான். நினிவே ஒரு மிகப்பெரிய நகரம். ஒருவன் இந்நகரத்தைக் கடந்துபோக மூன்று நாட்கள் நடக்க வேண்டும்.

4 யோனா நினிவே நகரத்தின் நடு இடத்திற்குச் சென்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். யோனா, “40 நாட்களுக்குப் பிறகு நினிவே நகரம் அழிக்கப்படும்!” என்றார்.

5 நினிவேயின் மக்கள் தேவனிடமிருந்து வந்த செய்தியை நம்பினார்கள். மக்கள் சாப்பிடாமல் உபவாசம் இருந்து அவர்களின் பாவங்களை நினைத்து மனந்திரும்ப முடிவு செய்தார்கள். மக்கள் சிறப்பான ஆடையை அணிந்து தங்கள் மன வருத்தத்தைக் காட்டினார்கள். அந்நகரிலுள்ள மக்கள் அனைவரும் இதனைச் செய்தார்கள். மிக முக்கியமான மக்களும், முக்கியமற்ற மக்களும் இதனைச் செய்தார்கள்.

6 நினிவேயின் அரசன் இவற்றைக் கேள்விப்பட்டான், அரசனும் தான் செய்த தீங்குகளுக்காக வருத்தப்பட்டான், எனவே அரசன் தனது சிம்மாசனத்தை விட்டு இறங்கினான். அரசன் தனது அரசனுக்குரிய ஆடையைக் கழற்றிப் போட்டுவிட்டு துக்கத்தைக் காட்டுவதற்குரிய சிறப்பு ஆடையை அணிந்துகொண்டான். பிறகு அரசன் சாம்பல்மேல் உட்கார்ந்தான், 7 அரசன் ஒரு சிறப்புச்செய்தியை எழுதி நகரம் முழுவதற்கும் அனுப்பினான்.

அரசனிடமிருந்தும் அவனது முக்கிய மந்திரிகளிடமிருந்தும் வரும் கட்டளை:

கொஞ்ச காலத்திற்கு எம்மனிதனும் மிருகமும் உண்ணக் கூடாது. மாடுகளும் ஆடுகளும் கூட வயலுக்குப் போகக்கூடாது. நினிவேயில் வாழ்கிற எதுவும் உணவு உண்ணவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. 8 ஆனால் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் துக்கத்தைக் காட்டும் சிறப்பு ஆடையால் தன்னை மூடிக்கொள்ள வேண்டும். மக்கள் தேவனிடம் உரக்கக் கதறவேண்டும். ஒவ்வொருவரும் தனது வாழ்வை மாற்றித் தீங்கு செய்வதை நிறுத்த வேண்டும். 9 பிறகு தேவன் மனம் மாறி தாம் திட்டமிட்ட செயல்களைச் செய்யாமல் விடலாம். தேவன் ஒருவேளை தன்னை மாற்றிக்கொண்டு நம் மீது கோபமில்லாமல் இருக்கலாம். அப்போது நாம் தண்டிக்கப்படாமல் இருக்கலாம்.

10 தேவன் மக்கள் செய்தவற்றைப் பார்த்தார். மக்கள் தீமைகள் செய்வதை நிறுத்தியதைப் பார்த்தார். எனவே தேவன் மாறித் தனது திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. தேவன் மக்களைத் தண்டிக்கவில்லை.

 

ஏசாயா 58:3-7 

3 இப்போது, அந்த ஜனங்கள், “உமக்கு மரியாதை செலுத்துவதற்காக நாங்கள் சாப்பிடுவதை நிறுத்துகிறோம். எங்களை ஏன் பார்க்கவில்லை? நாங்கள் உமக்கு மரியாதை செலுத்த எங்கள் உடலைக் காயப்படுத்துகிறோம். நீர் ஏன் எங்களைக் கண்டுகொள்ளவில்லை?” என்று கூறுகின்றனர்.

ஆனால் கர்த்தர் கூறுகிறார்: “நீங்கள் உங்களையே திருப்திப்படுத்திக்கொள்ள சிறப்பு நாட்களில் சாப்பிடாமல் இருக்கிறீர்கள். நீங்கள் சொந்த உடல்களை அல்ல, உங்கள் வேலைக்காரர்களையே தண்டிக்கிறீர்கள். 4 நீங்கள் பசியோடு இருக்கிறீர்கள். ஆனால், உணவுக்காக அன்று. நீங்கள் வாதம் செய்யவும் சண்டை செய்யவும் பசியாய் இருக்கிறீர்கள், அப்பத்துக்காக அல்ல. உங்கள் தீய கைகளால் ஜனங்களை அடிக்கப் பசியாய் இருக்கிறீர்கள். நீங்கள் உணவு உண்டதை நிறுத்துவது, எனக்காக அல்ல. நீங்கள் உங்கள் குரலைப் பயன்படுத்தி என்னைத் துதிக்க விரும்புவதில்லை. 5 அந்தச் சிறப்பான நாட்களில் சாப்பிடாமல் இருந்து ஜனங்கள் தம் உடலை வருத்திக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?ஜனங்கள் சோகமாகத் தோற்றமளிப்பதை விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா?ஜனங்கள் வாடிய செடிகளைப்போன்று தலை குனிந்து துக்கத்துக்கான ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஜனங்கள் தம் துக்கத்தைக் காட்ட சாம்பலில் உட்கார்ந்திருப்பதை நான் விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? இதையே உங்கள் சிறப்பான உபவாச நாட்களில் நீங்கள் செய்கிறீர்கள். கர்த்தர் இதைத்தான் விரும்புகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

6 “நான் விரும்புகின்ற சிறப்பான ஒரு நாளை உங்களுக்குச் சொல்வேன். ஜனங்களை விடுதலை பெறச்செய்யும் நாள். ஜனங்களின் சுமைகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒரு நாளை நான் விரும்புகிறேன். துன்பப்படுகிற ஜனங்களை நீங்கள் விடுதலை செய்யும் நாளை சிறப்பானதாக விரும்புகிறேன். அவர்களின் தோள்களிலிருந்து சுமையை எடுத்துவிடும் ஒரு நாளை நான் விரும்புகிறேன். 7 நீங்கள் உங்கள் உணவை பசித்தவர்களோடு பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் வீடற்ற ஏழை ஜனங்களைக் கண்டுபிடித்து, அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதை நான் விரும்புகிறேன். ஆடையில்லாத ஒரு மனிதனை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் ஆடைகளை அவனுக்குக் கொடுங்கள். அவர்களுக்கு உதவாமல் ஒளிந்துகொள்ளாதீர்கள். அவர்கள் உங்களைப்போன்றவர்களே.”

 

மத்தேயு 6:17-18 

17 எனவே, நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, மகிழ்ச்சியாகக் காணப்படுங்கள். முகம் கழுவிக்கொள்ளுங்கள். 

18 எனவே, நீங்கள் உபவாசம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் காண முடியாத உங்கள் பிதாவானவர் உங்களைக் காண்பார். உங்கள் பிதாவானவர் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். மேலும் அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.