ஏசாயா 28:16 ஆதலால், எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார், “நான் சீயோனில் அஸ்திபாரமாக ஒரு கல்லை வைப்பேன். . .

Stone Is Stone

ஏசாயா 28:16  

ஆதலால், எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார், “நான் சீயோனில் அஸ்திபாரமாக ஒரு கல்லை வைப்பேன். இது ஒரு விலை உயர்ந்த கல்லாக இருக்கும். மிக முக்கியமான கல்லின் மேலேயே எல்லாம் கட்டப்படும். அக்கல்லின்மேல் நம்பிக்கை வைக்கிற எவனும் ஏமாந்து போகமாட்டான்.

 

 

மத்தேயு 16:18 

18 எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது.

 

 

யாத்திராகமம் 8:24-32 

24 பிறகு கர்த்தர் தான் சொன்னபடியே செய்து காட்டினார். மிகுதியான ஈக்கள் எகிப்து தேசமெங்கும் பார்வோன் வீட்டினுள்ளும் அவன் அதிகாரிகளின் வீட்டினுள்ளும் நிரம்பியிருந்தன. ஈக்கள் தேசத்தை அழித்துக்கொண்டிருந்தன. 25 எனவே பார்வோன் மோசேக்கும், ஆரோனுக்கும் சொல்லியனுப்பினான். பார்வோன் அவர்களை நோக்கி, “இந்தத் தேசத்திலேயே உங்கள் தேவனுக்குப் பலிகளைக் கொடுங்கள்” என்றான்.

26 ஆனால் மோசே, “அவ்வாறு செய்வது சரியாக இருக்காது. எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடுவதற்காக மிருகங்களைக் கொல்வது கொடிய காரியம் என்று எகிப்தியர்கள் நினைக்கிறார்கள். இதை நாங்கள் இங்குச் செய்தால் எகிப்தியர் எங்களைக் கண்டு, எங்கள் மீது கற்களை வீசிக் கொன்றுவிடுவார்கள். 27 மூன்று நாட்கள் பாலைவனத்திற்குப் போய் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி செலுத்த அனுமதிக்கவும். நாங்கள் செய்யும்படியாக கர்த்தர் கூறியதும் இதுதான்” என்றான்.

28 அதற்கு பார்வோன், “பாலைவனத்திற்கு நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பலிகளைச் செலுத்துவதற்கு உங்களை அனுமதிப்பேன். ஆனால் வெகு தூரம் பயணம் செய்யக் கூடாது. இப்போது போய் எனக்காக ஜெபம் செய்யுங்கள்” என்றான்.

29 மோசே, “பார், நான் போய் உன்னிடமிருந்தும், உன் ஜனங்களிடமிருந்தும், உன் அதிகாரிகளிடமிருந்தும், ஈக்களை நீக்குவதற்காக கர்த்தரைக் கேட்டுக்கொள்வேன். ஆனால் கர்த்தருக்கு ஜனங்கள் பலி செலுத்துவதை நீ தடுக்கக் கூடாது” என்றான்.

30 பின் மோசே பார்வோனிடமிருந்து சென்று கர்த்தரிடம் ஜெபம் செய்தான். 31 மோசே கேட்டபடியே கர்த்தர் செய்தார். பார்வோன், அவன் அதிகாரிகள், ஜனங்கள் ஆகியோரிடமிருந்தும் ஈக்களை அகற்றினார். எல்லா ஈக்களும் அகன்றன. 32 ஆனால் பார்வோன் மீண்டும் பிடிவாதம் மிகுந்தவனாய் ஜனங்களைப் போக அனுமதிக்கவில்லை.

 

 

 

யாத்திராகமம் 9:13-35 

கல்மழை காற்று

13 பின்பு கர்த்தர் மோசேயிடம், “காலையில் எழுந்து பார்வோனிடம் போ. எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர், ‘எனது ஜனங்கள் என்னைத் தொழுதுக்கொள்வதற்குப் போக அனுமதி கொடு! 14 நீ அவ்வாறு செய்யாவிட்டால் எனது முழு சக்தியையும் உனக்கும், உனது அதிகாரிகளுக்கும், உனது ஜனங்களுக்கும் எதிராக அனுப்புவேன். அப்போது என்னைப் போன்ற தேவன் இவ்வுலகில் எவரும் இல்லை என்பதை நீ அறிவாய். 15 என் வல்லமையைப் பயன்படுத்தி ஒரு நோயை ஏற்படுத்தி அதனால் உன்னையும், உனது ஜனங்களனைவரையும் பூமியிலேயே இராதபடி அழிக்கமுடியும். 16 ஆனால் என் வல்லமையை உங்களுக்குக் காட்டுவதற்காகவே உங்களை இங்கு வைத்திருக்கிறேன். அப்போது உலகமெங்குமுள்ள ஜனங்கள் என்னைக் குறித்து அறிந்துக்கொள்வார்கள்! 17 எனது ஜனங்களுக்கு எதிராகவே நீ இன்னும் இருக்கிறாய். அவர்களை விடுதலை செய்வதற்கு நீ அனுமதிக்கவில்லை. 18 எனவே நாளைக்கு இதே நேரத்தில், ஒரு கொடிய கல்மழை காற்றை வீசச் செய்வேன். எகிப்து தேசத்தில் இன்றுவரை அதைப் போன்ற புயல்காற்று வீசியதே இல்லை. 19 இப்போதே உனது மிருகங்களை ஒரு பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிடு. வயல்களில் காணப்படும் உனக்குரிய பொருள் எதுவாயினும் அதைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிடு. ஏனெனில் வயலில் இருக்கும் எந்த மனிதனாயினும் சரி, மிருகமாயினும் சரி, அது கொல்லப்படும். அனைத்து பொருட்களின் மீதும் கல்மழை காற்று வீசும் என்று சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.

20 கர்த்தரின் செய்திக்குப் பார்வோனின் அதிகாரிகளில் சிலர் செவிசாய்த்தனர். அவர்கள் தங்கள் மிருகங்களையும், அடிமைகளையும், வீடுகளுக்குள் விரைவாகச் சேர்த்தனர். 21 ஆனால் மற்றவர்கள் கர்த்தரின் செய்தியை ஒரு பொருட்டாய் எண்ணவில்லை. அவர்கள் வயல்களிலிருந்த எல்லா அடிமைகளையும் மிருகங்களையும் விட்டுவிட்டனர்.

22 கர்த்தர் மோசேயிடம், “உன் கைகளை மேலே உயர்த்து. எகிப்து முழுவதும் கல்மழை பொழியத் துவங்கும். எகிப்தின் வயல்களிலுள்ள எல்லா ஜனங்கள், விலங்குகள் மற்றும் செடிகளின் மீதும் கல்மழை விழ ஆரம்பிக்கும்” என்றார்.

23 மோசே தனது கைத்தடியை உயர்த்தினான். இடி, மின்னல், புயல் ஆகியவை எகிப்தைப் பாதிக்குமாறு கர்த்தர் செய்தார். 24 எகிப்தில் புயல் வீசியபோது மின்னல் அதனூடே தோன்றியது. எகிப்து ஒரு தேசமான பின்னர், அங்கு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் இதுவேயாகும். 25 புயல், எகிப்தின் வயல்களிலிருந்த எல்லாவற்றையும், ஜனங்கள், மிருகங்கள், தாவரங்கள் அனைத்தையும் அழித்தது. வயல்களின் மரங்களைப் புயல் வீழ்த்தியது. 26 எபிரெய ஜனங்கள் வாழ்ந்த கோசேன் தேசத்தில் மட்டும் புயலின் பாதிப்பு ஏற்படவில்லை.

27 பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அழைத்து அவர்களிடம், “இம்முறை நான் பாவம் செய்தேன். கர்த்தர் நீதியானவர். நானும் எனது ஜனங்களும் குற்றம் செய்தோம். 28 தேவன் அனுப்பிய புயலும், இடியும், கல்மழையும் கொடியவை. புயலை நிறுத்தும்படியாக தேவனிடம் விண்ணப்பியுங்கள். நான் நீங்கள் போவதற்கு அனுமதிப்பேன். நீங்கள் இங்குத் தங்க வேண்டியதில்லை” என்றான்.

29 மோசே பார்வோனிடம், “நான் நகரத்தை விட்டுப் புறப்பட்டதும் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தபடியே என் கைகளை உயர்த்துவேன். இடியும் கல்மழையும் நின்றுபோகும், இந்த பூமியில் கர்த்தர் இருக்கிறார் என்பதை அப்போது நீ அறிவாய். 30 ஆனால் நீயும் உனது அதிகாரிகளும் உண்மையாகவே கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவில்லை என்பதை நான் அறிவேன்” என்றான்.

31 சணல் பயிர்களில் ஏற்கெனவே கதிர்களும், வாற்கோதுமைப் பயிரில் பூக்களும் தோன்றியிருந்தன. இச்செடிகள் அனைத்தும் அழிந்தன. 32 ஆனால் கோதுமையும், கம்பும், பிற தானியங்களைக் காட்டிலும் தாமதமாக அறுவடை ஆகும். எனவே இவை அழிக்கப்படவில்லை.

33 மோசே பார்வோனிடமிருந்து புறப்பட்டு நகரத்திற்கு வெளியேபோய் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்ய கரங்களை உயர்த்தினான். உடனே கல்மழையும், புயலும், இடியும்கூட நின்றுபோனது.

34 மழை, புயல், இடி ஆகியவை நின்றுபோயின என்பதைக் கண்ட பார்வோன் மீண்டும் தவறு செய்தான். அவனும், அவனது அதிகாரிகளும் மீண்டும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள். 35 இஸ்ரவேல் ஜனங்களை விடுதலை செய்ய பார்வோன் மறுத்தான். மோசேயின் மூலமாக கர்த்தர் கூறியபடியே இது நிகழ்ந்தது.

 

 

யாத்திராகமம் 10:8-10

8 எனவே பார்வோன் மோசேயையும், ஆரோனையும் திரும்பவும் தன்னிடம் அழைக்கும்படிக்கு அதிகாரிகளை அனுப்பினான். பார்வோன் அவர்களை நோக்கி, “நீங்கள் போய், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள், ஆனால் யார் யார் போகப்போகிறீர்கள் என்பதைச் சரியாக எனக்குக் கூறுங்கள்” என்றான்.

9 மோசே பதிலாக, “இளைஞரும், முதியோருமாகிய எல்லா ஜனங்களும் போவோம். எங்களோடு எங்கள் மகன்களையும், மகள்களையும், ஆடுகளையும், மாடுகளையும், அழைத்துச் செல்வோம். கர்த்தரின் பண்டிகை எங்கள் எல்லோருக்கும் உரியது என்பதால் நாங்கள் எல்லோரும் போவோம்” என்று கூறினான்.

10 பார்வோன் அவர்களிடம், “நான் உங்களையும் உங்கள் ஜனங்களையும் எகிப்தைவிட்டுப் போகும்படியாக அனுமதிக்கும் முன்னர் கர்த்தர் உங்களோடு கண்டிப்பாக இருக்கவேண்டும். பாருங்கள், நீங்கள் தீமையான ஒன்றைத் திட்டமிடுகிறீர்கள். 11 ஆண்கள் மாத்திரம் போய் கர்த்தரைத் தொழுதுகொள்ளலாம். நீங்கள் முதலில் அதைத்தான் என்னிடம் கேட்டீர்கள். உங்கள் ஜனங்கள் எல்லாரும் போகமுடியாது” என்று கூறி, பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அனுப்பிவிட்டான்.

 

 

யாத்திராகமம் 10:18-29 

18 மோசே பார்வோனிடமிருந்து சென்று கர்த்தரிடம் ஜெபித்தான். 19 எனவே, கர்த்தர் காற்றின் திசையை மாற்றி மேற்கிலிருந்து மிகப் பலமான காற்று ஒன்று வீசும்படியாகச் செய்தார். அது வெட்டுக்கிளிகளை எகிப்திலிருந்து அகற்றி, செங்கடலில் விழச்செய்தது. எகிப்தில் ஒரு வெட்டுக்கிளிகூட இருக்கவில்லை! 20 ஆனால், பார்வோன் மீண்டும் பிடிவாதமாக இருக்குமாறு கர்த்தர் செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்குப் பார்வோன் அனுமதிதரவில்லை.

காரிருள்

21 கர்த்தர் மோசேயை நோக்கி, “உனது கைகளை மேலே உயர்த்து. எகிப்தை இருள் மூடும். நீங்கள் உணர்ந்துகொள்ளுமளவிற்கு இருள் மிகுதியாக இருக்கும்!” என்றார்.

22 மோசே கைகளை மேலே உயர்த்தியபோது, இருண்ட மேகமானது எகிப்தை மறைத்தது. எகிப்தை மூன்று நாட்கள் இருள் மூடியது.

23 ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை. மூன்று நாட்களாக எந்த இடத்திற்கும் போவதற்காக ஜனங்கள் எழுந்திருக்கவில்லை. ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும் ஒளி இருந்தது.

24 பார்வோன் மீண்டும் மோசேயை வரவழைத்து, “நீங்கள் போய் கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் குழந்தைகளையும் அழைத்துப்போகலாம். ஆனால் உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் இங்கே விட்டுச் செல்லவேண்டும்” என்றான்.

25 மோசே, “நாங்கள் போகும்போது எங்கள் ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, எங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குப் பயன்படுத்தும்பொருட்டுப் பலிகளையும், காணிக்கைகளையும் நீங்களே கூட எங்களுக்குக் கொடுப்பீர்கள்! 26 ஆம், கர்த்தரைத் தொழுதுகொள்வதற்கு நாங்கள் எங்கள் மிருகங்களையும் கொண்டு செல்வோம். எந்த மிருகத்தின் குளம்பையும்கூட விட்டுச் செல்லமாட்டோம். கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குத் தேவைப்படுபவை எவை என்பதை இன்னமும் நாங்கள் சரியாக அறியவில்லை. நாங்கள் போகவிருக்கும் இடத்தை அடையும்போதுதான் அதை அறிந்துகொள்வோம், எனவே இந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் நாங்கள் கொண்டு செல்லவேண்டும்” என்றான்.

27 கர்த்தர் பார்வோனை இன்னும் பிடிவாதம் உடையவனாக்கினார். எனவே பார்வோன் அவர்களை அனுப்ப மறுத்தான். 28 பிறகு பார்வோன் மோசேயிடம், “இங்கிருந்து போய்விடு! நீ இங்கு மீண்டும் வருவதை நான் விரும்பவில்லை! என்னைப் பார்க்க நீ மீண்டும் வந்தால் நீ சாவாய்” என்று கூறினான்.

29 அப்போது மோசே பார்வோனை நோக்கி, “நீ ஒரு விஷயத்தைச் சரியாகச் சொன்னாய், நான் உன்னைப் பார்ப்பதற்கு மீண்டும் வரப்போவதில்லை!” என்றான்.

 

 

மத்தேயு 21:42 

42 இயேசு அவர்களுக்குக் கூறினார்,, “நீங்கள் வேதவாக்கியங்களில் கட்டாயம் படித்திருப்பீர்கள்:

, “‘கட்டிடம் கட்டியவர்கள் விரும்பாத கல்லே மூலைக் கல்லாயிற்று.

இது கர்த்தரின் செயல், நமக்கு வியப்பானது.’